கோலாலம்பூர் :
இந்தோனேசிய உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியின் ஊடக நிர்வாகியாக கிறிஸ்டபர் ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
17 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கு பிபா உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி இந்தோனேசியாவில் நடைபெறவுள்ளது.
நவம்பர் 5ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 2ஆம் தேதி வரை இப்போட்டி நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் ஊடக பிரிவு நிர்வாகியாக கால்பந்து உலகில் பரிச்சயமான கிறிஸ்டபர் ராஜ் பிபாவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
2006ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் ஏஎப்சி பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ வின்ட்சர் பால் அப்பொறுப்பை வகித்தார்.
தற்போது அவரின் வழிகாட்டலில் கிறிஸ்டபர் ராஜ் இப்பொறுப்பை வகிக்கவுள்ளார்.
ஊடக நிர்வாகி என்ற முறையில் இறுதிப் போட்டி வரை ஊடக நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகள் சுமூகமாக நடைபெறுவதை அவர் உறுதி செய்யவுள்ளார்.
மெனாஹான் சோலோ அரங்கில் அவர் இப்பணிகளை மேற்கொள்ளவுள்ளார்.
டிசம்பர் 2-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டி உட்பட மொத்தம் 14 போட்டிகள் இந்த அரங்கில் நடைபெறும்.
கிறிஸ்டபர் ராஜ் கால்பந்தில் கிட்டத்தட்ட 20 வருட அனுபவமும், 2018 ரஷ்யா உலகக் கிண்ணம், 2022 கட்டார் உலகக் கிண்ணம்போன்ற பல அனைத்துலக போட்டிகளில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.